Friday, March 19, 2010

கனவுகள்...

கனவுகளுக்கு பாகுபாடில்லை..
அவை எல்லார் கதவையும் தட்டுகின்றன
ஒரு முறை, பல முறை,
இடைவிடாமல் எல்லா முறையும்.

அழகான பரிசாக, நம்பிக்கை என்னும் அடயாளம் விட்டு
செல்கின்றன!!

கனவை அறிந்தவர்க்கு நிஜம் ஒரு சொர்க்கம்...
அறியாதவர்க்கு... "பெட்டர் லக் நெஃஸ்ட் டைம்"!!

இரயிலோடு சினேகம்

எல்லா புகை வண்டி சந்திப்புகளிலும்..
எதோ ஓரு சினேகம் அறுந்த
அல்லது பிணைத்த கதைகளின்
தடயமிருக்கும்.

தட தடத்து இரயில் ஊர் தாண்டி
ஊர், பறந்து வர,
பரிவாய் பிறந்தகம் அழைக்கும்
தோழமை நிச்சயமிருக்கும்.

மழை கழுவிய காயங்கள்,
வெயில் சிரித்த நேரங்கள் போக,
உரையாட விஷயம் எதேனும்,
நிச்சயமிருக்கும்.

யார் கண்டார்?...
தமிழ் மொழி..போல் இரயில் மொழி
என்றேதானும் உருவாக்கப்பட்டு,

இரும்பு தோன்றா, தண்டவாளம் தோன்றா
முன்பே தோன்றியதுவாம் "இரயில் மொழி"..

என்று ஏதேனும் இரண்டு இலக்கியய்
இரயில்கள் கொடி பிடித்திருக்கும்.

வந்து போன எல்லா பயணிகளுக்கும்,
இடமளித்து, அவர்களில் ஏற்ப்படும்..
சண்டை, இடையூறை, மௌனமாய் ரசித்து,
இரைந்து பாய்ந்திருக்கும் இடை விடாமல்!

ஒரு தவமென, யாகமென
இரண்டு, தண்டவாளத்துகிடையே பிசிறாமல்
ஓடி ஓடி சேர்திருக்கும் பல ஊர்களை!

வழி பிறழ்ந்த இரயில்களின் இயலாமையை
இரவில் நிசப்தமாக ஆராய்ந்தவாறே
ஆழ்ந்திருக்கும் தன் வேலையில்...

மனிதனுக்காக மட்டுமேயன்றி..
தனக்காகவும் தடயங்கள் அது வைத்திருக்குமா
என்று கேட்டு வைக்க வேண்டும், எங்கேனும்
இரயில் மொழி கற்று ஒரு நாள்!!!

காத்திருப்பு!!!

கல்லூரி நாட்களின் மற்றுமொரு கவிதை...

குறைந்த பட்சம் ஓர் அரைப் புன்னகை
நீ வீசியிருந்தால்
வெயிலடித்த..
என் ஜன்னல் கதவு குளிர்ந்திருக்கும்...

நரைத் தெரியும் காலை வானமாய்
இரவின் அரை நிலவாய்
நீ என்னுள் உலவுகிறாய்

வீதி எதோ, நான் அறியாத
ஓர் தெருவில் மோனப் புத்தனாய்..
தாடி சொறிந்து நடந்திருப்பாய்
இப்பொழுது..

நண்பர்களுக்காக, இன்று,
வராத பஸ்ஸிற்க்காக தினமும்,

எப்பொழுதேனும் இரவில்
உனக்காகவும்,

விழித்திருந்து காத்திருக்கிறேன்...

மௌனம் பேசும் மனம்!!!(?)

கல்லூரி நாட்களில் எழுதிய என் அழகான கவிதை...


ஓயாது பேசும் மனமே...
சற்றேனும் மௌனம் பேசேன்..

குகைக்குள் கவியும் இருட்டாய்
எண்ணங்களை எழுப்பாதே..

ஏதேனும் சரி ...
கனவென்றோர் கதை கூறாதே
புறாக்கள் பட படக்கும் பம்பாய் பீச்

டெல்லியின் புராதன பாழ் கோட்டைகள்
மனித கூட்டமுடைய சந்தை காலங்கள்...
அமைதியாய் ஆனால் கங்கை..

மண்குவளையில் கிடைக்கும் சூடான இஞ்சி டீ..
மயக்கும் மஞ்சள் மாலை நேரங்கள்

காலடியில் நொறுங்கும் காய்ந்த
சருகுகள்...
வானுயர அளாவி நிற்க்கும் நீள் மரங்கள்....

அடையார் ஆயிரம் வருட ஆலமரம்
அருகே ஜி.கே தத்துவ மொழிகள்...
தொட்டு கொள்ள ஊறுகாயாய்
தி.ஜா வும், ல.ச.ர வும்..
உருளை சிப்ஸாய்.. சுஜாதாவும்.. பாலகுமாரனும்..

இது போதும் என் ஜன்ம சாபல்யம் என என்னை மயக்காதே....

ஊரடங்கிய நிசியின் நிசப்தத்தில்
தலயணையோடு தலை மட்டும் தானுறங்க
தொட்டில் விட்டிறங்கிய குழந்தையாய்.. நீ குதித்தோட,

கை கொட்டி சிரிக்கும் நட்சத்திரங்கள்....
கொஞ்சம் பொறு இன்னும் உள சில...

நித்திய மல்லியின் பந்தல் வாசம்
குளிர்ந்த தரை.. சாய்மானமாக
ஈஸிசேர்..
பௌர்ணமி நிலவு, கரும்பட்டாய் வானம்..
வெற்றிலை சிவந்து, முகம் புன்னகை பூவாக பூக்க

காதலுக்கு கட்டியம் கூற
பாங்காய் கணவன்...

கனவிலொரு நிமிடம் பாரதியாய் தான் மாறி,
டர்பனும், கருப்பு கோட்டும், முறுக்கு மீசையுமாய்
:கண்ணம்மா" என்றழைக்க...
உருகிடும் நான்...
இப்படி எதாவது இன்பக் கதை கூறாதே!!!


ஒயாது பேசும் மனமே...
சற்றேனும் மௌனம் பேசேன்!!!!

அசையா வானம் வேண்டி...

அசையா வானம் வேண்டி...
------------------------------

தனிமை திமிங்கலமாய்,
தவறுகள் செய்ய தூண்டுகிறது

தனிமை தெய்வீகமாய் அதே
தவறுகளுக்கு "சலவை கட்டி" தேடுகிறது

ஏனிப்படி இரு அவதாரம்?
எதற்க்காக இந்த தவிப்புகள்.....

தவறை சுற்றி, தேவைகளை சுற்றி
தவம் கலைந்த முனிவர் பொல்,
ஏனிப்படி ஒர் அலைச்சல்?

யாரிடம் எனக்கு என்ன கோபம்?
யாரில் என்னை தேடுகிறேன்...?

நித்தம் நித்தம் தொலைந்து போகிறேன்
யுகங்களாகி விடுகிறது என்னை மீட்க....

என் வானம் ஏன் இப்படி இடம் மாறிகொண்டே இருக்கிறது?
யாரை நான் கேள்வி கேட்டு கொண்டே இருக்கிறேன்?

எனக்குள்ளிருக்கும் "என்னையா"? இல்லை,
எங்கும் நிறைந்திருக்கும் இறைவனையா?....

யார் வேண்டும் எனக்கு?
மண் கூடு கரைந்து என் "மனிதன்" என்னை மீண்டெடுப்பானா?
எனக்கென்றோர் அசையா வானம் நிறுத்தி தருவானா?

சார்ந்து வாழ்வதென் இயல்பா?
அதற்க்கு பெயர்தான் பெண்ணா?

கரைந்து போன மணிதுளியாய்..
நான் அழிந்து கொண்டிருக்கிறேன்
கடந்த காலத்தில்...

என் நினைவுத் தகடுகளின் சுமை
கூடிகொண்டே போகிறது

சமுத்திரத்தின் முடிவில்லா அலை இயக்கம் போல்...
நான் பிறந்து கொண்டே இருக்கிறேன்,
ஒவ்வொரு யுக துவக்கத்திலும்.

என் பிறப்பின் வார்ப்பும்,
இறப்பின் நிகழ்வும்.. பூமியில் பதிந்து
கொண்டே இருக்கிறது...

பெருமூச்சிட்டப்படி, காலப் பிரம்மன்
கரை தட்டுவான், தன் "ஜனன கப்பலை" என்றேனும் ஒரு நாள்..

அந்த பொழுதில்
புரட்டி பார்ப்பேன், என்
நினைவுத் தகடுகளில், என் பதிவுகளை...

கடிதம் குழந்தைக்கு!!!

உலகமறிய ஓர் மன்னிப்பு கடிதம்
உனக்காக உயிரே....

உன் மடித்த உதட்டின் கேவல்களில்,
கிழிந்து எறியப்பட்டேன் நான்!

கால் உதைத்து எனக்காக நீ அழுது, நின்றது,
என்னுள் காலம் இழுத்த அழியா சூடு!!

ஸோஃபாவில் சுருண்டு நீ,
உறங்குகயில், உன் காய்ந்த கண்ணீர்கோடுகள்,

இடித்து காட்டும். உன்னோடு நான் விளையாடமல்
போன மாலை நேரங்களை....!

சிதறிய பூக்களாய், நீயும் உன் நண்பர்களும் பஸ்ஸிற்க்காக நிற்க்கையில்,
உன்னோடு நான் நிற்க்காத சோகம் உன் கவிழ்ந்த முகத்தில்.

மாலை வீடு திரும்பியும், மிரட்டும் அலுவலக வேலைகளில்..
நீயும் அதட்டப்படுவாய்

உஷ்..! உஷ்!! என்று உன்னை அடக்கியபடியே எடுப்பேன்
என்னுடய கான்ஃபரன்ஸ் கால்ஸ் அனைத்தயும்

உணவு ஊட்டுவதும், உறங்க வைப்பதும்.. எல்லாமே
ஒரே வார்த்தைக்குள் அடக்க படும்- டைம் ஆச்சு!!

நிலவும், நட்சத்த்திரமுமாய் கொட்டி கிடக்கும் வான வெளி...
நம்மிருவருக்குமாய் சேர்ந்து ஏமாந்து.. வெள்ளி முளைக்க
உத்தரவிட்டு செல்லும்!

உன்னிடம் உள்ள நேரமனைத்தும் எனக்காக நீ காத்திருப்பதில் கரைந்து விடுகிறது.
என் நேரமனைத்தும் உன் எதிர்காலமென்ற பெரிய கனவில் கரைந்து விடுகிறது


அழகான கனவொன்றை நேற்று உரைத்தாய் நீ!

அம்மா! நீ, தேவதை போல் இறக்கை கட்டி என்னுடனே இருந்தாய்,
பறந்தாய் மற்றும் சிரித்தாய் என்று!

சுருண்டு விட்டது என் மனசாட்சி..
உன்னை கண்டு சிரிக்காது
நான் வீணடித்த மணித்துளிகளை நினைத்து!!

உன் வலி நான் உணர்வேன்..
என் வலி நீ உணரும் நாள் வரும் வரை காத்திருப்பேன்..
அது வரை என்னை மன்னித்து என் மனச்சோர்வு களைவாய்...

கனவுகள் இலவசம்!!!

அட
கனவுகள் இலவசம் என்றார்கள் அங்கே..
எங்கே என்று என்னை கேட்க்காதே...

எங்காயினும் சரி இலவசம் என்றால் ..அங்கே
ஒரு க்யூ அமைத்து நிற்க்கும் மத்தியமரின் மத்தியில்...
நீ என்னை காணலாம்!!!

என்னை மட்டும் அன்றி, என்னை போல் பலரை...
கண்ணில் சொந்த கனவுகளின் வழியலோடு.....

இலவசத்தையும் விட்டு வைப்பானேன் என்று எண்ணும்
மக்களின் பதிப்பாய் நானும்..

நீ அவ்வரிசையில் உள்ளாய் அல்லது இல்லை நான் அறியேன்..

எப்படியோ இப்படியாயினும் கனவுகள்
மக்கள் மத்தியில் பரவினால்..
நமக்கு ஒரு சந்தோஷம்..

அட என்ன போலித்தனமான "சந்தோஷம்" இது?!
எல்லா செயல்களிற்க்கும், சிந்தனைகளுக்கும்
நியாயம் கற்ப்பிக்கும் எண்ணம் ஏன்?

இலவசமாய் இல்லாவிடிலும்..
எனக்கு வேண்டும் என் கனவுகள்...


கனவுகளின் முதுகில் ஏறி கனவு காணும்
பொழுதேனும் இவ்வுலகம் என் வசம்..

எல்லாரையும் இறைவனாய் மாற்றும் ஒரு கணம்..
நாம் கனவு காணும் நேரம் !!!


ஆம் பின்னே.. நாமே படைத்து , நாமே மறக்கலாம், அழிக்கலாம்
அல்லது ஆக்கவும் செய்யலாம்..

கடவுளின் அற்புத கனவு மானுடம் என்றால்...
ஏன் மானுடம் கனவை விஸ்த்தரிக்காது வீழ்ந்து கிடக்க வேண்டும்?

இலவச கடைகளில் தேடாது, தன்னுள் தேட வேண்டிய கனவை.. கடையில்
கேட்கும் அவலம் ஏன்?

கேட்பது என்று முதல் அவலமாயிற்று...?
கேட்பது கற்ப்பதின் முதல் படியன்றோ....

கடவுளோடு ஒரு உரையாடல்..ஊருக்காக...

என்ன எழுத நான்?

என் மோனத்திலிருந்து துயிலெழுந்தேன் இன்றுதான்...
எதோ தவமாய் நான் காணும் ...
ஒவ்வொரு நொடியும் இறைவனது என்று எண்ணி...

இன்றல்ல நாளை எனக்காக சில மணிதுளி என்று ஏமாந்து... ஒத்தி வைத்தேன் என் எழுதலை..

வாழ்க்கையின் என் பதிப்பை எழுதமால் போனேன்...
என்னை கண்டு இறைவன் சிரித்தார்...


இனி டயலாக் கன்வர்ஸேஷன் கடவுளுக்கும் எனக்கும்:

இறைவன்:

உனக்கென நீ ஒதுக்கும் துளிகளில் அல்லவோ நான் இருந்தேன்...
பொய்களில்லா பூமி சமைத்து அதில் ஆர்வம் நட்டு,

நான் நடத்த நல்ல செங்கோல் தருவாய்
என்றெல்லவோ நினத்தேன் நான்..

மனம் விரும்பும் நிஜம் மட்டும் உரைக்காமல்,
மனம் தாங்கும் உண்மைகள் வளர்ப்பாய் என்று நினைத்தால்,
பொய்களில் அமிழ்ந்து விட்டாய் நீ குழந்தாய்.. என்றார்..

நான்:


என் தேம்பலை கவனிக்காது.... நீர் சுமத்தும் குற்றம் நியாயமா?..

கடவுள்:


என்னை எல்லா மூலைகளிலும் தேடும் நீ,
எல்ல திருப்பதிலும் என் உதவி நாடும் நீ,

உன் பொய்களில் என்னை மறந்து விடுகிறாய்...
"கன்வினியன்ஸ் ஆஃப் தாட்ஸ்" என்பது இதுதானா என்றார்?

நான்:


பொய்களிலா நான் அமிழ்ந்திருக்கிறேன்.. என்ன பேத்தல் இது?...
வேலை, கடமை பொய்யாகுமா?

கடனின்றி, கபடின்றி, நான் வாழ வேலை,
அதன் உழைப்பு முக்கியமில்லையா? என்றேன்....

வேடிக்கை கலந்த வேதனையுடன் கடவுள்:


அசட்டு பெண்ணே....நீ படைக்கும் கவிதைகளிற்க்கு

கண நேரம் தருவது உனக்கு கஷ்ட்டமா என்றார்?

வேலை என்ற பெயரில் நீ பயப்பட்டு கபடத்தில் இறங்கும் நேரம்
எல்லாம் நான் உன்னை விட்டு விலகி விடுகிறேன்... நீ அது அறியாது,
என்னை தேட நான் உனக்காக தவிக்கும் தவிப்பு
நான் அல்லவோ அறிவேன்...என்றார்.

கோவமாக நான்:


அய்யா...வாழவும் சொல்கிறீர், வாழ குடுத்த உலகமோ பொல்லாதது...
கொஞ்சம் பிசகினால், மிதித்து மிழுங்கி விடும்..

நீரோ கண்ணுக்கு தெரியாத மோன லோகத்தில்,
மனசாட்சியாய் வந்து, வம்பு பேசி மறைந்து விடுவீர்...
நானல்லவோ மாட்டிருக்கிறேன் இங்கே... என்றேன்.

அன்புடன் கடவுள்:


வாயாடி பெண்ணே..வாழ வழி கேட்டாய் சொன்னேன்..
வீழ்வதற்க்கும் வழி இருக்கிறது..
மேலே எழவும் வழி இருக்கிறது...

நீ எழாமலே என்னை குறை குறினால்,
நான் வேண்டாவா வரம் கொடுக்க என்றார்..

பணிவுடன் நான்:



எனக்கு என்றுதான் புரிந்திருக்கிர்து நீங்கள் கூறும் கூற்று..
இதோ நான் வந்து விட்டேன் என் எழுத்துலகத்தில்..
இனி என்னை வழி நடத்துவீரா? என்றேன்...

இறைவன்:


எப்பொழும் போல் மாய புன்னகை கொடுத்தார் மறைந்தார்...!!!


Hope to continue the blogging ...