கல்லூரி நாட்களில் எழுதிய என் அழகான கவிதை...
ஓயாது பேசும் மனமே...
சற்றேனும் மௌனம் பேசேன்..
குகைக்குள் கவியும் இருட்டாய்
எண்ணங்களை எழுப்பாதே..
ஏதேனும் சரி ...
கனவென்றோர் கதை கூறாதே
புறாக்கள் பட படக்கும் பம்பாய் பீச்
டெல்லியின் புராதன பாழ் கோட்டைகள்
மனித கூட்டமுடைய சந்தை காலங்கள்...
அமைதியாய் ஆனால் கங்கை..
மண்குவளையில் கிடைக்கும் சூடான இஞ்சி டீ..
மயக்கும் மஞ்சள் மாலை நேரங்கள்
காலடியில் நொறுங்கும் காய்ந்த
சருகுகள்...
வானுயர அளாவி நிற்க்கும் நீள் மரங்கள்....
அடையார் ஆயிரம் வருட ஆலமரம்
அருகே ஜி.கே தத்துவ மொழிகள்...
தொட்டு கொள்ள ஊறுகாயாய்
தி.ஜா வும், ல.ச.ர வும்..
உருளை சிப்ஸாய்.. சுஜாதாவும்.. பாலகுமாரனும்..
இது போதும் என் ஜன்ம சாபல்யம் என என்னை மயக்காதே....
ஊரடங்கிய நிசியின் நிசப்தத்தில்
தலயணையோடு தலை மட்டும் தானுறங்க
தொட்டில் விட்டிறங்கிய குழந்தையாய்.. நீ குதித்தோட,
கை கொட்டி சிரிக்கும் நட்சத்திரங்கள்....
கொஞ்சம் பொறு இன்னும் உள சில...
நித்திய மல்லியின் பந்தல் வாசம்
குளிர்ந்த தரை.. சாய்மானமாக
ஈஸிசேர்..
பௌர்ணமி நிலவு, கரும்பட்டாய் வானம்..
வெற்றிலை சிவந்து, முகம் புன்னகை பூவாக பூக்க
காதலுக்கு கட்டியம் கூற
பாங்காய் கணவன்...
கனவிலொரு நிமிடம் பாரதியாய் தான் மாறி,
டர்பனும், கருப்பு கோட்டும், முறுக்கு மீசையுமாய்
:கண்ணம்மா" என்றழைக்க...
உருகிடும் நான்...
இப்படி எதாவது இன்பக் கதை கூறாதே!!!
ஒயாது பேசும் மனமே...
சற்றேனும் மௌனம் பேசேன்!!!!
No comments:
Post a Comment