Friday, July 30, 2010

சந்தோஷ சாரல்


சந்தோஷ சாரல்,
என்னை தழுவ அனுமதி கேட்டு, தொட்டு தொட்டு நின்றது...

காதை கிழிக்கும் வாகனங்கள், என்னை, கண்டதும் அமைதி காத்தன..
சிடுசிடுக்கும் conductor, சிரித்தப்படி ticket கிழித்தான்..

பூக்கார கிழவி முழம் பொய் சொல்லாமல் கையில் குடுத்தாள்..
கோவிலில், கூட்டமில்லை, கடவுளுக்கும் எனக்கும் இடையில் யாருமில்லை...

உலகமே என்னை சந்தோஷமாக இரு என்று சொன்னது போல்,
நிரம்பி வழிகிறது மனது, நான், யாருக்கும் விரோதி இல்லை

அகம் மலர்ந்து இன்முகம் காட்டும் ஒவ்வொருவரும் என் நண்பர்தான்..
அட இருக்கும் அரை நாள் வாழ்க்கையில் வேதனைக்கு குத்தகை விட்டு விட்டம் பார்க்கவா நாம் பிறந்தோம்
வாரும் மக்கட்காள், நட்புடன் கை கோர்த்திடுவோம் வாழ்க்கையோடு..

அன்புடன்
L

Thursday, July 29, 2010

suvadugaL


எந்த வழிபோக்கனின் பாத சுவடுகளிது?...
யாரை காண விரைந்து சென்றிருக்கும்..
மணலில் பள்ளம் பரித்து , வீடு செல்லும் பதற்றம் தெரிகிறது இதற்க்குள்....
அல்லது, வீடு திரும்பாமல் , வாழ்க்கை விடை தேடி வீடு தாண்டியிருக்குமா இந்த பாதங்கள்..?

ஏதாயினும் சரி.. தனியாய் தவமாய் சோகம் சுமந்து சென்றிருக்கும்...
தோள் சாய, கை கோர்க்க, ஆளின்றி... தனிமை என்னும் சுமை சுமந்து... பாலைவன படுகயில் கண்ணீர் கரைத்து...
காற்றின் வழி சென்ற போக்கன் இவன் யாரோ? எது ஊரோ?

போர் முடிந்து புகலிடம் தேடும் வீரனின் ஒட்டத்தின் பதிவோ?
எந்த ஊரின் அமைதி குலைந்த்தோ?.. (அ )எந்த ஊரின் அமைதி நிலை நாட்ட இந்த பரிதவிப்போ..?

என்ன கதறுகிறது இந்த பாலைவனம்.. போகாதே என்றா? இல்லை அய்யோ அழிந்தது சாம்ராஜ்யம் என்றா?

முடிவுபெறா கடிதம் போல், கடைசி பக்கம் கிழிந்த கதை புத்தகம் போல்... இந்த சுவடுகளும் எதை சொல்ல விழைந்து
விட்டு விட்டது நம்மை யூகிக்க!!

இன்னும் ஒரு நாள்-அலுவலகத்தில்!......


இன்னும் ஒரு நாள்-அலுவலகத்தில்!......

எங்கோ என்றோ நான் யாரையோ அறிந்தும் அறியாமலும் மிதிக்க,
நீ என்னை யாரையோ விட்டு அடிக்க வைக்கிறாய்
முகம் துடிக்க, கண்ணீர் பள பளக்க , ஒன்றும் நடவாதது போல், நான் நடித்த படி...
குனிகிறேன், நிமிர்வதர்க்கு தான் என்றெண்ணிய படி...
இதுவும் கடந்து போகும், என் வேதனை மறைந்து போகும்..

குன்றில் இருக்கும் என் குமரன், நீ என் கவலை தீர்த்து இன்முகம் மீட்டு தருவாய்.

நின்னை சரண் அடைந்தேன் என்று அலறிய என் பாரதியையே விட்டு வைக்கவில்லை, நான் எம் மாத்திரம்?

ஆயினும் குமரா, அடங்கி போ என்று அடக்கியும் அடங்கா மனதின் கேள்வி...உன்னிடத்தில்...

ஏன் இப்படி? என்ன பிழை ஏன் உணர்வுகள் .. வெடித்து, அடி வயிற்றிலிருந்து, வேதனை பொங்கி...

சோர்வடைந்து, கவனம் சிதறி... துக்கம் தொண்டை அடைக்க...

என்ன பாடம் கற்றோம்?... எங்கோ சிதறி விழுந்த சந்தோஷ துளி...எப்படி மீட்போம்?

என் மோன நிலை அடைவதில்லை நான்? ஏன் பொறுமை என்னை தட்டி குடுப்பதில்லை?
நீயோ எங்கிருந்தோ புன்னகைக்கிறாய், சந்தோஷ தருணங்களொடு, இவையும் பகிர் என்னோடு!

Friday, July 23, 2010

மழை-II


மழை..
என்னை சோம்பலாக்கி தான் இடைவிடாது உழைக்கிறது.
வானம் வெளிர்ந்து நிற்ப்பது போல் நானும் நிறமிழந்து நிற்க்கிறேன்...

சந்தோஷ சாரல் ஏன் வடிந்தது என்று நான் அறியும் முன்னர்.. சோகம் அப்பி விட்டது முகத்தில்..
சட்டென்று நான் அசந்த நேரம் பார்த்து புகுந்து விட்டது வெறுமை..
வேண்டும் ஏன்றால் கூட மாட்டேன் என்றது பொறுமை

ஏன் என்று கேட்டால் நான் அறியேன்.. இதற்க்கு நான் பெண் என்ற காரணம் போதும் என்றது மனது.
எல்லாரும் அவசரமாய் எதை நோக்கியோ விரைகையில் , நான் மட்டும் சோர்ந்து...

இப்படித்தான் பல சமயம்... நான் தனித்து போகிறேன்...
காரணங்கள் அறிய விழையாமலே...

மலை மேல் தவித்து தவித்து இறங்கும் காற்று போல்...
மூச்சு முட்டும் உறவுகள்.. புரியாத உணர்வுகள்...
எதையோ எப்பொழுதும் போல் எதிர்பார்த்து..ஏமாற்றம் அடையும் மனது..

நான் கோபித்து கொள்வதற்க்கென்றே கிடைத்த அப்பாவி கணவன்...

ஏன் என்னை பெண்ணாய் படைத்தாய் இறைவா? குழந்தை மனம் குடுக்க மறந்தாய்..

வான் மேல் பறந்தாலும், விண் முகர்ந்து வந்தாலும் நான் நானாய்.. சட்டென்று, நீர் கவிழ்த்த குடுவையாய்..
கலைந்த வானமாய் ஏன் மாறுகிறேன்?

மகள்

அங்கணம் நிறைய செம்பருத்தி பூக்கள் பூத்திருக்கிறது.. உனக்கு பிடித்த நிறத்தில்....

தோய்க்கிற கல்லும், மஞ்சளரைக்கும் படியும்..
அம்மாவின் அரைத்து விட்ட சாம்பார், உருளை பொரியலோடு, முருகன் library-யில் இருந்து எடுத்து வந்த குண்டு கதை புத்த்கம் வைத்து நீ ஒடியது நினைவில் வர..
அப்பா இல்லாத நேரம் மட்டும் கிடைக்கும் இந்த ஈஸி-சேர்... என்ற உன் செல்ல சிணுங்கல்,
குனிந்து பெருக்காத கற்பகம், உன் குரல் கேட்டதும் கட்டிலடியில் கூட கூட்டும் மாயம்..

சட்டை பையில் வைக்காமல் சிகரெட்டை ஒளித்தும் உன்னிடம் மட்டும் எப்படியோ மாட்டும் தம்பி...

உன் கை வைக்கும் தயிர் சாதம் எதிர்பார்த்து , குரைத்து குரைத்து ஓய்ந்து போன தெரு நாய்...
இவை எதுவும் மாறவில்லை...

நீ மாறிவிட்டாய்.. அரை மணிக்கொரு முறை "அவர்" கதை கூறி எங்களை அலுப்படைய செய்து விட்டாய்!...

அடித்தாலும் உண்ணாத கத்திரிக்காய் அவருக்கு பிடிக்கும் அதனாலே எனக்கும் என்று அசட்டு காரணம் கூறி
அம்மாவின் அர்த்தம் மிகுந்த பார்வைக்கும், புன்னகைக்கும் ஆளானாய்..

அன்று புரிந்தது, உன்னில் மகளை தொலைத்து.. பெண்ணை மீட்டோம் என்று!

Tuesday, July 6, 2010

பருவக்கால மழை...


பருவக்கால மழை...
நகரம் நனைத்து என்னை மட்டும் குனிந்து முத்தமிட்டு சென்றது!
சிரிப்பு குமிழ்களை வெடித்து விட்டு.. குழந்தையோடு, குழந்தையாய்..
கை கோர்த்து மழை நனைந்தோம்..
நீல குடையிலிர்ந்து முத்துக்கள் சொரிய சூரியனுக்கு ஒர் பாராட்டு பத்திரம் வாசித்தது மின்னல்.
நீரி தெளித்து நீர் அடித்து விளையாடியதில் சந்தோஷம் வெளிச்சமிட்டு நின்றது முகத்தில்!

உடலும், உள்ளமும் குளிர்ந்து.. உயிர் விரிந்து இறைவன் இறங்கிய தரையாய் ஆனது மனம்.

எதோ ஒர் விடுதலை உணர்வு எல்லாரிலும் , எல்லாருடய சிரிப்பிலும்

குடை எரிந்து குடை கீழே நனைய வாருங்கள்..
முத்து உதிர்க்கும் முத்தை எடுக்க வேண்டாம்.. நெஞ்சில் வாங்கிடுவோம்..
வளர்ந்த பின்பும் விளயாடுவோம் குழந்தைகளுக்கு நிகராக ஏனெனில், குழந்தை ஆகும் நேரம் நாம் கடவுளுக்கு நெருங்கும் நேரம்!!

Thursday, July 1, 2010

ஆஸ்திரியா -அழகு நகரம்!!!


கடவுளின் காதல் நகரம், போலும் இது!
பளிங்கு தரைகள், படம் வரைந்தது போல் தோன்றும் மரக்கூட்டங்கள்...
மலைத்தொடர்கள், அதை கண்டு, மயங்கும் மனம்...

கனவுகள் என்னை கை பிடித்து அழைத்து செல்வது போல்; சிங்காரிக்க தேவையில்லாத,
சித்திரமாய் ஊர்!!!

புதிய பாதை; புதிய மொழி, பழகியிராத வானம்..
சுகமாயிருக்கிறது இந்த தனிமை...

தூரம் செல்ல செல்ல, நெருங்கி கொண்டே இருக்கிறேன், எனக்குள்ளே என்னை!

இந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி; கூதுகலிக்கும் மனம்!!!
பறவையென மிதக்கிறது, பிடித்து போனது எனக்கு என் ஆஸ்திரியா - பயணம்!!!